மன்மத வருட 12 ராசிகளுக்கான பொதுப்பலன்கள்

   மன்மத வருடப் பிறப்பன்று மட்டுமின்றி அனுதினமும் இந்த அபிராமியம்மைப் பதிகத்தின் பாடலைப் படித்து அம்பாளை வழிபட்டால்,

சகல வரங்களும் கைகூடப்பெற்று நாமும் நம் குடும்பமும் வளமுடன் வாழலாம்!

கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழு பிணி இல்லாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தனமும்,
தழைத கீர்த்தியும், மரத்த வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,
தொலையாதா நிதியமும், கோணத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்,
துய்ய நின் படத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரோடுகூடு கண்டி,
அலையாழி அறி திலும் மாயனது தங்கையே , ஆதி கடவூரின் வாழ்வே,
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி அபிராமி.

மன்மத வருட கிரகப் பெயர்ச்சிகள்!

குருப் பெயர்ச்சி…
மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை (5.7.15) குரு பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் வக்ர பெயர்ச்சி அமார்கழி மாதம் 4-ந் தேதி 20 21.12.15 ஞாயிற்றுக் கிழமை இரவு மணி 2.45 மணிக்கு குருபகவான் அதிசாரத்தில் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
தை மாதம் 24-ந் தேதி 7 {8.2.16 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.26 மணிக்கு குரு பகவான் வக்ரம் அடைந்து சிம்ம ராசியில் அமர்கிறார்.
ராகு-கேது பெயர்ச்சி மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.16) வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணிக்கு, ராகு பகவான் சிம்ம ராசிக்குள்ளும், கேது பகவான் கும்ப ராசிக்குள்ளும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
——————–

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)

 

அதீத தன்னம்பிக்கை கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்குமஉடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உங்களின் தனாதிபதி சுக்ரனும் தன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீடு கட்டவும், வாங்கவும் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால், செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். பொறுப்புகள் தேடி வரும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இந்த ஆண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எதையோ இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம்.

புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும், உண்டு. ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி முன்பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷம் அடைவதாலும், மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரையிலும் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.

4.7.15 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால், தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு சோர்வு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. நெடு நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், 8.1.16 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 9-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால், ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்தப் பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

மொத்தத்தில், இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும்,

சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனை களையும் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் முருகப்பெருமானை, கந்த சஷ்டி கவசம் படித்து வணங்கி வாருங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.

 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் )

 

கலாரசனையும், கற்பனைத் திறனும் உள்ளவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் மன்மத ஆண்டு பிறப்பதால், தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந் திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால், சுற்றியிருப்பவர்களே உங்களை ஏமாற்றுவதாக நினைத்து வருந்துவீர்கள். களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால், குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் வரும் சின்னச்சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். மனைவிக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள் செய்ய நேரிடும். புதியவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

4.7.15 வரை உங்களின் அஷ்டம-லாபாதி பதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால், எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சில நேரங்களில் எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். 5.7.15 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவ தால், முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக்காட்டுவீர்கள். தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும்.
ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பிள்ளைகளை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். பழைய கடன் பிரச்னை தூக்கத்தைக் கெடுக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஆனால், 8.1.16 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால், பொறுப்புகள் அதிகமாகும். ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வழக்குகள் சாதகமாகும். ஆடி மாதம் 15-ம் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் அடைவதால், தொண்டை, கண், பல் வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் பாருங்கள். பண விஷயத்தில் கவனமாகச் செயல்படவும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்து போகும்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பணத் தட்டுப்பாடு மற்றும் பகைமையைத் தருவதாக இருந்தாலும், முயற்சியாலும், சமயோசித புத்தியாலும் வெற்றியைப் பெற்றுத் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: சிவபெருமானிற்கு வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் )

 

போராட்ட குணம் கொண்டவர் நீங்கள். சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கௌரவ பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

4.7.15 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 5.7.15 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால், எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், வீண் அலைச்சல்கள் உண்டு. எதிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல்நலனிலும் கவனம் தேவை. 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால், அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால், தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். கேது 9-ல் நுழைவதால், தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும்.

சித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. ஆனி, ஆடி, ஆவணி முற்பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால், பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிடுவது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து, அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். என்றாலும் ஜனவரி 7-ம் தேதி வரை கேது 10-ல் நிற்பதால், அலுவலகத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த ஆண்டு, சனி பகவான் திருவருளுடன் சாதகமாக அமைந்து, உங்களைச் சாதிக்க வைத் தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். எனினும், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: மாரியம்மனை, வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாருங்கள். ஆலய பணிகளுக்கு உதவுங்கள்.

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

சுதந்திரத்தை அளவாகப் பயன்படுத்துபவர் நீங்கள்! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் கூடி வரும்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறமை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும்போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தாயாருடனான பிணக்குகள் நீங்கும். இந்த ஆண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனைவியின் உடல்நலம் பாதிக்கக்கூடும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

4.7.15 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர்வதால், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அளவோடு பழகுவது நல்லது. 5.7.15 முதல் குரு தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால், பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மழலை பாக்கியம் கிடைக்கும். ஜனவரி 7.1.16 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனோபலம் கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நல்ல திருப்பம் உண்டாகும். 9-ம் இடத்தில் கேது நிற்பதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவைச் சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துபோகும். வழக்கை நினைத்து அவ்வப்போது பயம் வரும்.

8.1.16 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால், பணப்பற்றாக்குறை நீடிக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால் எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. கண் தொடர்பான பிரச்னைகள் வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும். கேது 8-ல் மறைவதால், தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். உணவு, வாகனம், வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

உத்தியோகத்தில், புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஈடுபாடு வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை சுறுசுறுப்பு ஆக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: பெருமாளிற்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1,2,3ம் பாதம்)

எடுத்த முடிவுகளில் பின்வாங்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், மகிழ்ச்சி தங்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், சிலருக்கு வெளிநாடு, அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களில் பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனம் அடைவதால், முதுகு வலி, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து நீங்கும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் அதிகமாகும். அலைச்சலும் இருக்கும். வீண்பழிகளும் வரக்கூடும். 5.7.15 முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும்.

உங்களுடைய ராசிக்கு பிரபல யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது, புத்தாண்டு பிறப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வீடு, மனை வாங்குவீர்கள். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விட்டுக்கொடுத்துப் போகவும். புதன் சாதகமாக இருப்பதால், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். ராசிக்கு 10-ல் சுக்ரன் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தைரியம் கூடும். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால், பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிலருக்கு சின்னச் சின்ன அறுவைச் சிகிச்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. 8.1.16 முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைய இருப்ப தால், மன உளைச்சல், தாழ்வுமனப்பான்மை வந்து போகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். ராகுவின் போக்கு சரியில்லாததால், குலதெய்வத்தை வணங்குங்கள்.

கேது உங்களுடைய ராசிக்கு 8-ல் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், சேமிப்புகள் கரையும். மனைவிக்கு ஆரோக்கியம் குறையும். 8.1.16 முதல் 7-ம் வீட்டிலேயே கேது வந்து அமர்வதால், மனைவியுடன் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால், தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். சில நேரங்களில் அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடலாம்.

பொதுவாக, இந்த வருடத்தில் வியாபாரம் ஓரளவுதான் லாபம் தரும். எனவே, பெரிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி, உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.;.

உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். எனினும், உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வீண் விமர்சனங்கள், விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். தை, பங்குனி மாதங்களில் புது வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சற்றே ஆரோக்யக் குறைவையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும், கடந்த கால அனுபவ அறிவால் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை, புதன் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள்.

 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2ம் பாதம்)

 

திட்டமிடுவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குடும்ப வருமானம் உயரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.உங்கள் ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், சிறுநீரக தொற்று ஏற்படலாம்; கவனம் தேவை. பயணங்களிலும் எச்சரிக்கை தேவை.

ராகு ராசிக்குள்ளேயே 7.1.16 வரை நீடிப்பதால், முன்கோபம் அதிகமாகும். நண்பர்களுடன் பகை ஏற்படக்கூடும். தூக்கம் குறையும். ராசிக்கு 7-ல் கேது அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். மனைவிக்கு பித்தப்பை சம்பந்தமான பிரச்னைகள் வந்து நீங்கும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால், யோக பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் மோதல்கள் விலகும்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் முற்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால், ரத்தத்தில் ஹீமோ குளோபின், கால்சியம் பற்றாக்குறையும், மின்சாரம், நெருப்பால் சிறுசிறு விபத்துகளும், சகோதர வகையில் செலவுகளும் வந்து நீங்கும்.

ராசிக்கு 3-ம் வீட்டில் சனி நிற்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். வழக்குகள் சாதகமாகும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பயனடைவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு.

சந்திரன் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது மன்மத வருடம் பிறப்பதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் உங்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனவருத்தம் வரும். பூமி, சொத்து, பாகப்பிரிவினை பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். தலையில் அடிபட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால், சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் – பொல்லாதவர்களை இனம் காண்பதில் குழப்பம் ஏற்படும்.

உங்களின் தன-பாக்யாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும்.

வியாபாரத்தில், இந்த வருடம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். கடன் தொகையை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான வழக்கு சாதகமாகும். சம்பள நிலுவைத் தொகை கைக்கு வரும். மார்கழி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, புதிய வாய்ப்பு வசதிகளை ஓரளவு அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்)

எல்லோரையும் அனுசரித்துச் செல்பவர் நீங்கள். உங்களின் ராசி நாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்து இருந்தாலும், ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில், மன்மத வருடம் பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவு கூடும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் குரு அமர்ந்திருக் கும் நேரத்தில் மன்மத வருடம் பிறப்பதால், 4.7.15 வரை இனம் தெரியாத கவலைகளும், வீண் பயமும் இருந்துகொண்டே இருக்கும்.5.7.15 முதல் குரு லாப வீட்டில் வந்து அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு கூடும், தடைகள் அகலும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் அமையும்.

ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் துரத்தும். எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால், கை, காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருங்கள். அவ்வப்போது பார்வைக் கோளாறு, காது வலி, தொண்டை வலி வந்து போகும். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதங்கள் வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

ராசிக்கு 6-ல் 7.1.16 வரை கேது தொடர்வதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். 8.1.16 முதல் 5-ம் வீட்டுக்குள் கேது நுழைவதால், பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். 7.1.16 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். ஆனால், 8.1.16 முதல் ராகு 11-வது வீட்டுக்கு வருவதால், திடீர் பண வரவு உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அவ்வப்போது ஈகோ பிரச்னைகளும், வாக்குவாதங்களும் வரும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.ஆடி மாதம் மத்திய பகுதி துவங்கி ஆவணி மாதத்திலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமாகி நிற்பதால், சிறுசிறு விபத்துகள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

வியாபாரத்தில் தேக்க நிலை நீடிக்கும். பாக்கிகளை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். ஜூலை மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஏமாற்றங்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருந்துகொண்டிருக்கும். ஆடி மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஏழரைச் சனியால் சில இடையூறுகளை அளித்தாலும், குருவின் திருவருளால் சாதிக்க முடியும்!

பரிகாரம்: ஈஸ்வரரை, பிரதோஷ நன்னாளில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஏழைப் பெண்களுக்கு உதவுங்கள்.

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

பிறருக்கு உதவும் மனப்பான்மை மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சனி நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால், கோபம் அதிகமாகும். வளைந்துகொடுத்துப் போவதன் மூலமாக இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் வெற்றிபெறலாம்.

ராசிக்கு 3-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு உயரும். சந்திரன் சாதகமாக இருப்பதால், சமயோசித புத்தியாலும் சாதித்துக் காட்டுவீர்கள். 7.1.16 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8.1.16 முதல் 4-ம் வீட்டில் கேது வந்து அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனோபலம் கூடும். ஆனால் செவ்வாய் 6-ல் மறைந்திருப்பதால், கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் ஆனி மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் முன்பகுதி மற்றும் மாசி மாதம் பிற்பகுதி முதல் பங்குனி மாதம் வரை பலவீனமாக இருப்பதால், இக்காலகட்டங்களில் சிறுசிறு விபத்துகள், பண இழப்புகள், சகோதரர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

புதன் உங்களுடைய ராசிக்கு 6-ல் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பழைய நண்பர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், சனி மனைவி ஸ்தானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதால், அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்துபோகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குரு பகவான் 4.7.15 வரை சாதகமாக இருப்பதால், மகளுக்குத் திருமணம் கூடி வரும். ஆனால், உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுவதால், பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் விசாரித்துப் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது. 5.7.15 முதல் உங்கள் ராசிக்கு குரு 10-ம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களைப் பற்றிய விஷயங்களை, ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப முதலீடு செய்வது நல்லது. மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். ஜூலை முதல் குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை, விரும்பத்தகாத இட மாற்றங்கள் எல்லாம் வந்துபோகும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு ஆரோக்ய குறைவையும், அலைச்சலையும் தந்தாலும், செல்வாக்கும் செல்வமும் பெற்றுத்தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிகிழமைகளில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வாருங்கள். இயன்றால் ரத்ததானம் செய்யுங்கள்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்)

தனக்குத்தானே நீதிபதியாக இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு கூடும். உங்களைப் பற்றிய அவதூறுகள் குறையும். ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கியிருப்பதால், பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக நடந்துகொள்வது நல்லது. தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.

7.1.16 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சின்னச் சின்ன காரியங்களைக்கூட ஒரே முயற்சியில் முடிக்க முடியாமல் போகும்.
8.1.16 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால், தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 7.1.16 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் 8.1.16 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால், வேலைச்சுமை குறையும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், குழந்தை பாக்யம் உண்டாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கும். 4.7.15 வரை உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால், அலைச்சலும், செலவினங்களும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும். நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விட்டு விலகுவார்கள். ஆனால் 5.7.15 முதல் குரு உங்களுடைய ராசிக்கு 9-ல் அமர்ந்து உங்கள் ராசி யைப் பார்க்க இருப்பதால், நல்லது நடக்கும். அலைச்சல் குறையும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தந்தைவழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில், இந்த ஆண்டு லாபம் அதிகமாகும். ராசிநாதனாகிய குரு பகவான் 5.7.15 முதல் 9-ல் அமர்வதால், வியாபாரத்தை விரிவுபடுத்த கடனுதவி கிடைக்கும். வைகாசி, ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. லாபம் அதிகரிக்கும். என்றாலும் 7.1.16 வரை ராகு 10-ம் வீட்டிலேயே நிற்பதால் இழப்புகள் வந்து போகும்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும் மொத்தத்தில் இந்த புத்தாண்டு, தடுமாற்றம், தயக்கத்தில் இருந்து விடுவிப்பதுடன், பல நற்காரியங்களில் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஞாயிறு அல்லது தசமி நாளில், ஈஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.

மகரம்: (உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2ம் பதம்)

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி பெருகும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர், சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். குடும்ப வருமானம் உயரும். மகளுக்கும் மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வீடு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.

உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், வேலைச்சுமை அதிகமாகும். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, தொண்டை வலி, கண் எரிச்சல் வந்து போகும். 7.1.16 வரை கேது 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பார்கள். தைரியம் கூடும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் உண்டு.

உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் செவ்வாய், புதன், சூரியன் அமர்ந்திருப்பதால், தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். புதன் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 7.1.16 வரை உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால், சேமிப்புகள் கரையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் இருக்கும். 8.1.16 முதல் 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் வந்து அமர்வதால், கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். மனைவியின் உடல் நிலை பாதிக்கும். பண விஷயத்திலும் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலை கிடைக்கும்.

குரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். 5.7.15 முதல் குரு 8-ல் சென்று மறைவதால், பயணங்கள், செலவினங்கள் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனஇறுக்கங்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் நினைத்தபடி லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

மொத்தத்தில் இந்த மன்மத வருடம் உங்களின் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதாகவும், உங்கள் செயல்களில் வேகத்தைக் கூட்டுவதாகவும் அமையும்.

பரிகாரம்: வேங்கடேச பெருமாளுக்கு, ஏகாதசி அல்லது சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்)

மற்றவர்கள் தயவில் வாழ விரும்பாதவர் நீங்கள். உங்கள் ராசிநாதனாகிய சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சந்தர்ப்பச் சூழ்நிலையைச் சமாளிக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ராசிநாதன் வலுவடைந்து காணப்படுவதால், உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆரோக்கியம் கூடும்.

உங்களுடைய ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தவிர்க்க முடியாத செலவுகளும், திடீர் பயணங்களும் இருக்கும். பணப்பற்றாக்குறை இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், 5.7.15 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் நின்றுகொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். கண் எரிச்சல், கண் வலி வந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. 8.1.16 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். சோர்வு அதிகரிக்கும். குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேதுவின் மீது விழுவதால், கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். எனினும், ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேருவதால், கெடுபலன்கள் குறையும். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

சூரியன், செவ்வாய், புதன் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பூமிப் பிரச்னைகள் தீரும். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால், வசதி, வாய்ப்புகள் பெருகும். பெற்றோரின் உடல் நிலை சீராகும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறும். 5.7.2015 முதல் வியாபாரம் பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பண உதவியும், கடன் உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில், அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு புதுத் தெம்பையும், வசதி, வாய்ப்பையும் தருவதுடன், சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணப் பெருமாளை வியாழக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வாருங்கள். தாய் இல்லா பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

புதுமையான சிந்தனையாளர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய சாதனை தொடரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்களுடைய ராசியிலேயே கேது 7.1.2016 வரை தொடர்வதால், அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகும். கணவன் – மனைவிக்குள் விவாதங்களும் வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். ராசியிலேயே கேது நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும்.

உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டிலேயே 7.1.16 வரை ராகு நீடிப்பதால், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். 8.1.16 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால், அதன் பிறகு எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும். தம்பதிக்குள் ஈகோ பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. மகளின் விருப்பப்படி திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், 5.7.15 முதல் உங்கள் ராசிநாதன் 6-ல் சென்று மறைவதால், செலவுகளால் திணறுவீர்கள். குரு 6-ல் மறைவதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். 8.1.16 முதல் உங்கள் ராசிநாதனாகிய குரு, ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.

ராசிக்கு 9-ம் வீட்டில் சனி அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், தந்தையின் உடல் நிலை லேசாக பாதிக்கும். தந்தைவழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சுக்ரன் ஆட்சி பெற்றிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தைரியம் பிறக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும்போது மன்மத ஆண்டு பிறப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறு, இருமல் அடிக்கடி வரும். செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

இந்த வருடம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், 5.7.15 முதல் உங்கள் ராசி நாதனும், உத்தியோக ஸ்தானாதிபதியுமான குரு 6-ல் சென்று மறைவதால், அலைச்சல், வேலைச்சுமை இருக்கும்.

மொத்தத்தில் இந்த மன்மத ஆண்டு, வாழ்வின் நெளிவு – சுளிவுகளைக் கற்றுத்தருவதாகவும், சிக்கனமும், சேமிப்புகளும் தேவை என்பதை உணர வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை; முருகப்பெருமானைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.