மேஷம்: (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)

நுண்ணறிவும், நுணுக்கமான செயல்பாடுகளும் உடையவர்களே! ஜய வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறக்கிறது.  புது வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் செவ்வாய் வக்கிரமாகி நிற்பதால் அலர்ஜி, சோர்வு, சிறு சிறு விபத்துகள் நிகழலாம். சகோதர வகையில் மனத்தாங்கல் உண்டாகும். வீடு- மனை வாங்குவதிலும் விற்பதிலும் யோசித்து செயல்படவும்.

12.06.14 வரை உங்கள் யோகாதிபதியான குரு 3-ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால், காரியத் தடைகள், உறவினர் மற்றும் நண்பர்கள் பகை வந்துபோகும். இளைய சகோதரர் வகையில் செலவு, பிரிவுகள்உண்டு. 13.06.14 முதல் குரு 4-ல் சென்று அமர்கிறார். எனவே, பண வரவு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். பயணத்தின்போது கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவிவழி உதவிகள் உண்டு.உத்தியோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். 20.06.2014 தேதி வரை கேது உங்கள் ராசியிலேயே நீடிக்கிறார். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம், முன்கோபம் வந்துபோகும். பேச்சில் கவனம் தேவை. 21.06.2014 முதல் உங்கள் ராசியை விட்டு கேது விலகுவதால் டென்ஷன் குறையும்; அழகு-ஆரோக்கியம் கூடும்.

15.12.2014 வரை கண்டகச் சனி நடைபெறுவதாலும், 20.06.2014 வரை ராகு சனியுடன் சம்பந்தப் பட்டிருப்பதாலும் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.  வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகளும் எழும். விட்டுக்கொடுத்து போகவும்.  15.12.2014 வரை, உங்கள் ராசியை சனி பார்ப்பதால் மறதி, மன இறுக்கம், வீண் சந்தேகம் வந்து நீங்கும். 14.07.14 முதல் 03.09.14 வரை உங்கள் ராசி நாதனான செவ்வாய், சனியுடன் சேர்ந்து பலவீனம் ஆகிறார். இந்த காலகட்டத்தில் பண இழப்பு, ஏமாற்றம் வந்து போகும்.

16.12.2014 முதல் அஷ்டமத்துச் சனி தொடங்குவதால் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். ஐப்பசி மாதம் முதல் செவ்வாய் வலுவடைவதால், மனதில் நிம்மதி பிறக்கும். சகோதர வகையில் பகை நீங்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். வீடு கட்டத் துவங்குவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். 25.9.14 முதல் 18.10.14 வரை சுக்கிரன் வலுவிழப்பதால் பல் வலி, பார்வை கோளாறு, ஆபரண இழப்பு,வாகன விபத்து மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். ஆவணி, தை, மாசி மாதங்களில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளுவது நல்லது. உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அனுபவம் இல்லாத புதிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

13.06.2014 முதல் உத்தியோக ஸ்தானத்தை குரு பார்க்க இருப்பதால், சாஃப்ட்வேர் துறையினர், தங்களது உத்தியோகத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடவேண்டியிருக்கும். ஜய வருடம் பிறக்கும்போது, உங்கள் யோகாதிபதி குருவின் நட்சத்திரத்தில் சனி  நிற்பதால், நல்ல வேலை வாய்ப்பு கூடி வரும்.

கன்னிப் பெண்களுக்கு, உங்களின் சுகாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால், தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு.

 80% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம் நிம்மதியையும், பண வரவையும் தருவதாக அமையும்.

 பரிகாரம்: அருகிலுள்ள முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சந்தனக் காப்பு செய்யலாம். அன்னதானம் செய்யலாம். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து ஸ்ரீஜய வருடத்தில் வளமாக வாழலாம்.

ரிஷபம்: (கிருத்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி,

மிருகசீரிஷம் 1,2ம் பாதம்)

பேச்சிலே கண்டிப்பும் மனத்தில் இரக்கமும் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது ஜய வருடம் பிறக்கிறது. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். உங்களின் 5-ம் வீட்டில் ஜய வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் உயரும். மகளுக்கு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர் கல்வி மற்றும் உத்தியோக முயற்சிகள் சாதகமாகும்.

12.06.14 வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். 13.06.14 முதல் வருடம் முடியும் வரையிலும் குரு 3-ல் அமர்வதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். சோர்வு, திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். 20.06.14 வரையிலும் ராகு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் தொடர்வதால், கனவு நனவாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். கேது 12-ல் மறைந்திருப்பதால் திட்டமிடாத பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். 21.06.14 முதல் உங்கள் ராசிக்கு 5-ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகமாகும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க நேரிடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க்கவும். கேது 21.06.14 முதல் லாப வீட்டில் நுழைவதால், ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பண வரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பு உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதத்தில் உங்கள் ராசி நாதன் சுக்கிரனும், சுகாதிபதி சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் இருமல், உஷ்ணத்தால் வயிற்று வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். பணப் பற்றாக் குறையும் உண்டு. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்கியம் பாதிக்கும்.

15.12.14 வரையிலும் சனி பகவான் 6-ல் நிற்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். சிலர், சொந்தத் தொழில் தொடங்குவர்.

16.12.14 முதல், சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், எதிலும் ஆர்வமின்மை, தாழ்வு மனப்பான்மை, சோர்வு வந்து நீங்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் போட்டி, வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிக்கு சிறு சிறு விபத்துகள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் பற்று- வரவு உயரும். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவர். 13.06.14 தேதி முதல், குரு 3-ல் மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.  சனி பகவான் 16.12.14 முதல் 7-ல் அமர்வதால், இட மாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் அவ்வப்போது எழும்.

மாணவ-மாணவியர் சமயோசித புத்தியால் சாதிப்பார்கள்.  கன்னிப்பெண்களுக்குப் புது வேலை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும்.

 75% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம் உங்கள் திறமையைச் சோதிப்பதாக இருந்தாலும், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்ஸ்ரீநடராஜப் பெருமானை திருவாதிரை நட்சத்திர நாளில் வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4ம் பாதம், திருவாதிரை,

புனர்பூசம் 1,2,3ம் பாதம்)

மற்றவர்க்கு வழிகாட்டியாக வாழ்பவர் நீங்கள். உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்கும்போது, ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். புதிய வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் ஜய வருடம் பிறப்பதால், தடைப்பட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

12.06.14 வரை ஜென்ம குரு தொடர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். 13.06.14 முதல், குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால், எதிர்பார்த்த தொகை வந்துசேரும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.  வீண் பழி நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. விலகிய சொந்தபந்தங்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இருமல், சளித் தொந்தரவு, செலவுகள் ஏற்படும்.

20.06.14 வரை, கேது லாப வீட்டில் நிற்கிறார். உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி துவங்கும்.

21.06.14 முதல், கேது உங்கள் ராசிக்கு 10-ல் நுழைவதால், வேலை அதிகரிக்கும். எவருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். கௌரவக் குறைச்சலான சம்பவங்கள் நிகழக்கூடும். 20.06.14 வரை, ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும்.

21.06.14 முதல், ராகு 4-ல் நுழைவதால் தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களை  சரிபார்க்கவும். வீடு மாறும் சூழல் உருவாகும்.

15.12.14 வரை சனிபகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால், உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.16.12.14 முதல் சனி 6-ல் நுழைவதால் எதிரிகளும் நண்பர்களாவர். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கும். வியாபாரத்தில், தள்ளுபடி விற்பனை மூலம் லாபம் ஈட்டுவீர்கள். புது முதலீடுகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ஜுவல்லரி, போன்ற வகைகளால் லாபம் அடைவீர்கள்.

12.06.14 வரை ஜென்ம குரு தொடர்வதால், வேலைச் சுமை உண்டு.

13.06.14 முதல் உங்கள் ராசியை விட்டு குருபகவான் விலகுவதால் அலுவலகத்தில் நிம்மதி உண்டு.  கேது 21.06.14 முதல் 10-ல் அமர்வதால் சக ஊழியர்கள் மத்தியில் உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். மாணவ-மாணவியர், அதிக மதிப்பெண் பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சிலர், உயர் கல்விக்காக அயல்நாடு செல்வார்கள்.

80% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், வருடத்தின் மையப்பகுதியில் இருந்து திடீர் யோகங்களும், அதிரடி முன்னேற்றங்களும் உங்களைத் தேடி வரும்.

பரிகாரம்காலபைரவர் சந்நிதியில்  அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகை சிறு மூட்டையாகக் கட்டி தீபமேற்றிட, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அல்லது நெய்விளக்கேற்றி அம்மனை தரிசித்துவர, நன்மையான பலன்களே ஏற்படும். வணங்குங்கள்.

கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம்)

நல்ல கருத்துகளை நிலைநிறுத்துவதில் வல்லவர் நீங்கள். உங்கள் பாதகாதிபதி சுக்கிரன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில், ஜய வருடம் பிறக்கிறது. கடினமான காரியங்களும் எளிதில் நிறைவேறும். புதிய பதவிக்குத்தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கு அழைப்பு வரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில்  ஜய வருடம் பிறப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைப்பட்ட விஷயங்கள் நிறைவேறும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்றுவிட்டு, புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். 12.06.14 வரை, உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் குரு மறைந்து காணப்படுவதால், பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். அலைச்சல் அதிகரிக்கும். 13.06.14 முதல், குருபகவான் ஜென்ம குருவாக அமர்வதால், உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். மஞ்சள் காமாலை, காய்ச்சலால் சோர்வடைவீர்கள். தம்பதிக்கு இடையிலான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். 20.06.14 வரையிலும் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். எடுத்த காரியத்தை முடிக்கத் திணறுவீர்கள்.

21.06.14 முதல் ராகு 3-ல் நுழைவதால் தைரியம் கூடும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். ஆனால் 21.06.14 முதல் 9-ம் வீட்டில் நுழைவதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்களும் வந்துசெல்லும். 15.12.14 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.  தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

16.12.14 முதல், சனி 5-ம் வீட்டில் நுழைவதால் வீண் பழி, தோல்வி மனப்பான்மை நீங்கும். என்றாலும், பிள்ளைகளால் பிரச்னை, அவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில், அதிகம் உழைக்கவேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். அனுபவம் இல்லாத தொழிலில் இறங்க வேண்டாம். மார்கழி பிற்பகுதி, பங்குனி மாதங்களில் புது தொடர்புகள் கிடைக்கும். லாபம் உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

மாணவ-மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துங்கள். கன்னிப்பெண்கள், நட்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும். கல்யாணம் தள்ளிப்போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும்.

70% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம், ஆரோக்கியக் குறைவை யும், வீண் செலவுகளையும் தந்தாலும், இடையிடையே எதிர்பாராத வெற்றிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்தட்சிணாமூர்த்தியை, நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை நோயாளியின் மருத்துவத்துக்கு உதவுங்கள்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

வெளிப்படையானவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் ஜய வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. உங்கள் ரசனைக்கு ஏற்ப சொத்து அமையும். உங்கள் ராசியை சுக்கிரன் பார்க்கும் நேரத்தில் ஜய வருடம் பிறப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமை கூடும். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். சகோதர வகையில் இருந்த மன வருத்தம் நீங்கும். வைகாசி, ஆனி மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருப்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

12.06.14 வரை, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு தொடர்வதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன்; மகனுக்கு நல்ல  வேலை அமையும். 13.06.14 முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால், வீண் விரயம், ஏமாற்றம், செலவுகள் வந்து செல்லும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்க நேரிடும். 20.06.14 வரை கேது 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்பு கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். 20.06.14 வரை ராகு 3-ல் இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

21.06.14 முதல் ராகு 2-லும்; கேது 8-லும் அமர்வதால், குடும்பத்தில் சலசலப்புகள், பார்வைக் கோளாறு வரக்கூடும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். வாகன விபத்து, அதீத செலவுகள் இருக்கும்.

15.12.14 வரை சனி 3-ம் வீட்டில் தொடர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். புது வேலை கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் திரும்பக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு வாங்குவீர்கள். சிலர், புதிய தொழில் தொடங்குவீர்கள்.

16.12.14 முதல் அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதால் வேலைச்சுமை, வாகனப் பழுது, தாயாருடன் மோதல், அவருக்கு மூட்டு வலி, தைராய்டு பிரச்னை வந்து செல்லும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மற்றும் மார்கழியின் பிற்பகுதி மற்றும் மாசி மாதங்களில் வீண் செலவுகள், குடும்பத்தில் சச்சரவு, முன்கோபம், சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் வந்து செல்லும். வியாபாரத்தில், தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகள் வசூலாகும்.

12.06.14 வரை உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள்.  13.06.14-ந் தேதி முதல் கூடுதல் கவனம் தேவை. வைகாசி, ஆனி, பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புது பொறுப்புகள் தேடி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவியர், படிப்பில் தீவிரம் காட்டுங்கள். கன்னிப்பெண்கள், உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவார்கள்.

80% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம், தடைப்பட்ட வேலைகளை முடிக்க வைப்பதுடன், உங்களுடைய நீண்ட நாள் ஆசைகளை

நிறைவேற்றித் தருவதாக அமையும்.

பரிகாரம்விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.

கன்னி: (உத்திரம் 2,3,4ம் பாதம் முதல், ஹஸ்தம்,

சித்திரை 1,2ம் பாதம்)

நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில், ஜய வருடம் பிறக்கிறது. இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறும் ஆற்றல் உண்டாகும். உங்கள் ராசியிலேயே ஜய வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். வருடம் பிறக்கும்போது செவ்வாய் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதுடன், சுக்கிரனும் 6-ம் வீட்டில் பலவீனமாகி நிற்பதால், மன இறுக்கம் அதிகமாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். ஆனி, ஆடி, மார்கழி மற்றும் மாசி மாதங்களில் திடீர் யோகங்களும் உண்டாகும்.

12.06.14 வரை குரு 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும்.

13.06.14 முதல் குருபகவான் லாப வீட்டில் சென்று அமர்வதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் புதிய முயற்சிகளில் கவனம் தேவை.

20.06.14 வரை கேது உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டிலும், ராகு 2-லும் நிற்பதால்  உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்ப அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 21.06.14 முதல் ராகு உங்கள் ராசிக்கு உள்ளேயும், கேது 7-ம் வீட்டிலும் நுழைவதால் விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். அலைச்சல் குறையும். என்றாலும் வீண் டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, வந்துசெல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனைவிக்கு அடிவயிற்றில் வலி,  தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து மனம் கலங்குவீர்கள்.

15.12.14 வரை சனி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால், சாதாரண பேச்சும் சண்டையில் முடியலாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்குமோ என்ற அச்சம் வரும். கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவது நல்லது.

16.12.14 முதல் ஏழரைச் சனி விலகி 3-ம் வீட்டில் சனி நுழைவதால், உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை அறிந்து லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். எனினும் பெரிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் 12.06.14 வரை குரு 10-ல் தொடர்வ தால் மறைமுக எதிர்ப்புகளும், வேலைச்சுமையும் இருக்கும். 13.06.14 முதல், தேங்கிக்கிடக்கும் பணிகளை விரைந்து  முடிப்பீர்கள்.

மாணவ-மாணவியருக்கு, மேற்படிப்பைத் தொடர, எதிர் பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கன்னிப் பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வார்கள். நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள்.

85% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி, உங்களை புலம்ப வைத்தாலும், பிற்பகுதி திடீர் யோகங்களை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் ஸ்ரீவேங்கடாசலபதிப் பெருமாளை வணங்கி வாருங்கள்.

துலாம்: (சித்திரை 3,4ம் பாதம், சுவாதி,

விசாகம் 1,2,3ம் பாதம்)

அன்புக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5-ம் வீட்டில் வலுவாக நிற்கும்போது, ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் ஜய வருடம் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனத்தை வாட்டும். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

12.06.14 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், பிரச்னைகளை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவாள். மகளின் உயர்கல்வி சிறப்பாக அமையும். எதிரிகளும் நண்பர்களாவர்.

13.06.14-ம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால், எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது; கவனம் தேவை.

20.06.14 வரை கேது உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலும், ராகு ராசியிலும் நீடிப்பதால், அவ்வப்போது முன்கோபம் வரும். ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு முதலான உபாதைகள் வந்துபோகும். பழைய கசப்பான சம்பவங்கள் குறித்து எவரிடமும் விவாதிக்க வேண்டாம். மனைவியிடம் வீண் சந்தேகம் வேண்டாம். அவருக்கு முதுகுத்தண்டு, அடிவயிறு மற்றும் கணுக்கால் வலி வந்து போகும். மனைவி வழி உறவினருடன் விரிசல் வரலாம். 21.06.14 முதல் ராகு 12-ல் மறைவதாலும், கேது ராசிக்கு 6-ல் அமர்வதாலும் தடைகள் நீங்கும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். சிக்கனம் அவசியம்.

15.12.14 வரை சனி உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் ஜென்மச் சனியாக இருப்பதால், உடல் நலம் பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

16.12.14 முதல் பாதச் சனி தொடங்குவதால் பார்வைக் கோளாறு, பேச்சால் பிரச்னை, குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். சித்திரை, ஐப்பசி, மாசி மாதங்களில் அலைச்சல், வீண் டென்ஷன், குழப்பம் வந்து செல்லும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் குறையும். புது முயற்சிகளில் இறங்கவேண்டாம்.

12.06.14 வரை குரு 9-ல் நிற்பதால், உத்தியோகத்தில் மதிப்பு கூடும்.  13.06.14 முதல், குரு 10-ல் நுழைவதால் வேலை அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள், மனக்கலக்கம் வந்துபோகும்.

மாணவ-மாணவியர், தங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே, பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக்கூடும்; கவனம் தேவை.

75% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி ஒரளவு பணவரவையும், பிற்பகுதி ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், லட்சுமி நரசிம்மரையும் வணங்கி வரவேண்டும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை)

நீதி தவறாத நன்னெறியாளர் நீங்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் இருக்கும் போது ஜய வருடம் பிறப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாக்கி பணத்தைக் கொடுத்து, புதிய சொத்துக்கு பத்திரப் பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள், உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் நிற்கும்போது, ஜய வருடம் பிறப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

12.06.14 வரை குரு 8-ல் மறைந்து நிற்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடையும் வாய்ப்பு உண்டு. அதீத வேலை, அலைச்சல், செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தால் நல்ல நட்பை இழக்க நேரிடலாம்; கவனம் தேவை.

13.06.14 முதல், உங்கள் ராசிக்கு 9-ல் குரு நுழைவதால் திடீர் பணவரவு, யோகம் எல்லாம் உண்டாகும். மதிப்பு உயரும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். வீடு கட்டவும் வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணம், மகனின் உயர்கல்வி மற்றும் உத்தியோக விஷயங்கள் சிறப்பாகக் கைகூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

20.06.14 வரை கேது உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

21.06.14 முதல் கேது ராசிக்கு 5-ல் நுழைவதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் காரணமாக பிள்ளைகளைப் பிரிய நேரிடும். உறவினர்கள் குறித்து ஆதங்கம் எழும். அதிகம் செலவு செய்து பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

20.06.14 வரை, ராசிக்கு 12-ல் ராகு மறைந்திருக்கிறார்.  பழைய பகை மற்றும் கடனை நினைத்துக் கலங்குவீர்கள். அடுத்தவர் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். தாயாருக்கு கை, முழங்கால் வலி, சிறு சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். எதிர்காலம் பற்றிய பயம் வரும்.

21.06.14 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால், எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். புதிய வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

15.12.14 வரை ஏழரைச் சனியில் விரயச் சனி இருப்பதால் தூக்கம் குறையும். திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், விரயம் வந்துசெல்லும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.

16.12.14 முதல், சனி உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக அமர்கிறார். அது முதல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொடுக்கல்- வாங்கல் வேண்டாம்.

உத்தியோகத்தில் 12.06.14 வரையிலும், பணிகளை போராடி முடிக்கவேண்டி இருக்கும். 13.06.14 முதல் வேலைப்பளு குறையும்.

மாணவ- மாணவியருக்கு, கல்வியில் மதிப்பெண் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. உயர்கல்வி எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி கிட்டும். திருமணத் தடைகள் நீங்கும்.

75% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம், உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்குங்கள். முடிந்தால் சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அன்னதானம் செய்துவர, மேலும் நன்மைகள் வரும்.  ரத்த தானம் செய்யுங்கள்.

 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

நல்லதையே நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-ல் இந்த ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் செல்லும்போது, ஜய வருடம் பிறப்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். கௌரவம் உயரும்.

12.06.14 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

13.06.14 முதல் குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும்.

20.06.14 வரையிலும் கேது உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள்.

21.06.14 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-லும், கேது 4-லும் அமர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள்.

15.12.14 வரை சனி லாப வீட்டில் நிற்பதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வசதியுள்ள வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

16.12.14 முதல் சனி பகவான் 12-ல் மறைந்து, ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரயச் சனி தொடங்கயிருப்பதால், ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய காரியங்களை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

12.06.14 வரை குரு சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். 13.06.14 முதல் குரு 8-ல் மறைவதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கவே செய்யும்.

மாணவ- மாணவியருக்கு அரசு தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும். தீய நட்புகள் விலகும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர்வார்கள். கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு கிட்டும். சிரத்தையாக முயற்சித்து, நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள்.

70% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம் சுபச் செலவுகளையும், தொலைதூர பயணங்களையும் தருவதுடன், உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறுவதற்கு உறுதுணை புரிவதாக அமையும்.

பரிகாரம்ஸ்ரீபிரத்யங்கராதேவியை வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள்.

 மகரம்: (உத்திராடம் 2,3,4ம் பாதம், திருவோணம்,

அவிட்டம் 1,2ம் பாதம்)

இலவசங்களை விரும்பாத நீங்கள், பதவியில் இருப்பவர்களைவிட தன் பத்து விரல்களை மட்டுமே நம்புபவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால், தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சுக்ரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்து தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.  கல்வித் தகுதிக்கேற்ப ஒரு உத்தியோகம் இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும்.

12.06.14 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்கமுடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் பழிகள் வரக்கூடும். 13.06.14-ம் தேதி முதல் குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

20.06.14-ம் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

21.06.14-ம் தேதி முதல் கேது 3-ம் வீட்டில் அமர்வதால் தடைகள், எதிர்ப்புகள் குறையும். இளைய சகோதர வகையில் ஆதரவு கிட்டும்.

20.06.14-ம் தேதி வரை ராகு 10-ல் நிற்பதால், சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். அதற்காகக் கவலைப்பட  உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். 21.06.14-ம் தேதி முதல் ராகு 9-ம் வீட்டில் நுழைவதால், அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.

15.12.14 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நிற்பதால், கடந்த காலத்தில் ஏற்பட்ட வெற்றிகள், பாராட்டுகளை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

16.12.14 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் நுழைவதால், வியாபாரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் மதிப்பெண் கூடும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! உங்கள் மனத்துக்கேற்ப  நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோரின் அன்பும்

80% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம் உங்களின் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதுடன், அந்தஸ்தையும் வழங்கி உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்ஸ்ரீமுருகப் பெருமானை  நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுங்கள்.

கும்பம்: (அவிட்டம் 3,4ம் பாதம், சதயம்,

பூரட்டாதி 1,2,3ம் பாதம்)

குடியிருந்த கோயிலாம் பெற்ற தாயாரை மானசிகக் கடவுளாக மதித்து நடப்பவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்த ஜய வருடம் பிறப்பதால், எதிர்ப்புகள் அடங்கும்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதப் பிற்பகுதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் ஓரளவு பணவரவும், பதவியும் வந்து சேரும். மகளுக்குத் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள்.  உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் நிற்கும்போது ஜய வருடம் பிறப்பதால், அடிவயிற்றில் வலி, சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் மனத்தாங்கல்,  சிக்கல்கள் வந்து செல்லும்.

12.06.14-ம் தேதிவரை குருபகவான் சாதகமாக இருப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

13.06.14-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.

20.06.14-ம் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், தைரியம் கூடும். சொத்துச் சேர்க்கை உண்டு. ராகு 9-ம் வீட்டில் நீடிப்பதால், தந்தைக்கு வேலைச்சுமை, டென்ஷன், அவருடன் கருத்து மோதல்கள் ஏற்படும். 21.06.14-ம் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-லும் மறைவதால், யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை விமர்சிப்பார்கள்.

15.12.14-ம் தேதிவரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் வெளிவருவீர்கள். புது வேலை கிடைக்கும்.

16.12.14-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் சனி நுழைவதால், வீண் வதந்திகள், உத்தியோகத்தில் வேலைச்சுமை ஏற்படும். வியாபாரத்தில், ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எனினும், லாபம் கணிசமாக உயரும்.உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்.

மாணவ-மாணவிகள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். வகுப்பறையில் ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்கத் தயங்காதீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.

75% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடம், உங்களின் எதிர்பார்ப்பு களை ஒரளவு நிறைவேற்றுவதுடன், உற்றார்-உறவினர்களின் மத்தியில், உங்கள் மீதான மதிப்பு- மரியாதையை உயர்த்துவதாக அமையும்.

 பரிகாரம்ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்துவர, சிரமங்கள் குறையும்..

 மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி)

மாற்று வழியில் யோசிக்கும் சாமர்த்தியசாலி நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில், ஜய வருடம் பிறக்கிறது. உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமையும். அழகு, இளமை கூடும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். பலவீனங்களை மாற்றிக்கொள்வீர்கள். சுக்கிரனும் புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும்போது ஜய வருடம் பிறப்பதால், கனிவான பேச்சால் காரியம் சாதிக்க முயல்வது சிறப்பு எனும் முடிவுக்கு வருவீர்கள். பணப் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

12.06.14 வரை, உங்கள் ராசிநாதன் குரு 4-ல் நிற்பதால் வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். 13.06.14 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும்.  வெகு நாட்களுக்கு முன் வாங்கிப்போட்ட மனையில் வீடுகட்டி முடிப்பீர்கள். குழந்தைக்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு, அழகான வாரிசு உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார்.

20.06.14 வரை, ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-லும் நிற்பதால் கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகங்கள், ஈகோ பிரச்னைகளால் சச்சரவு எழலாம். பல், காது மற்றும் தொண்டை வலி வரக்கூடும். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். 21.06.14 முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ராகுவும் 7-ம் வீட்டில் அமர்வதால் விரக்தி, விரயம் வந்துபோகும். பணத்தட்டுபாடு இருக்கும். மனைவிக்கு ஃபைப்ராய்டு, முதுகுத் தண்டில் வலி, சிறு சிறு உடல் உபாதைகள் வந்துபோகும். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப்பாருங்கள்.

15.12.14 வரை அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், புதிய நபர்களை வீட்டுக்கு அழைத்து வராதீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது.  பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்குமோ எனும் பயம் அடிமனத்தில் இருந்து கொண்டே இருக்கும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம்.

16.12.14 முதல், சனி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் மனப்போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சச்சரவுகள் விலகும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பணவரவு அதிகரிக்கும்; வேலை கிடைக்கும்; சொத்து சேரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். எனினும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால், புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்து ஏமாற வேண்டாம். ஆனால் 13.06.14 முதல் ராசிநாதன் குரு உச்சமடைவதால் லாபம் இரட்டிப்பாகும்.

13.06.14 முதல் குரு 5-ல் அமர்வதால், உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் எல்லாம் விலகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எனினும், அஷ்டமத்துச்சனி தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும்.

மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் உற்சாகம் பிறக்கும். விளையாட்டில் பதக்கம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, வேலை கிடைக்கும். பெற்றோர் விருப்பப்படி திருமணம் முடியும்.

 80% நன்மை மொத்தத்தில் இந்த ஜய வருடத்தின் முற்பகுதி கசந்தா லும், மையப் பகுதி- மகிழ்ச்சியையும்; இறுதிப் பகுதி- வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்ஸ்ரீ காமாட்சி அம்மனை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள், பைரவரை வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.